08 நவம்பர் 2011

உயிரைக் குடித்த கிரிஜா!

நானும் ராமுவும் நல்ல நண்பர்கள். கல்லூரியில் வைத்துதான் எங்கள் ரெண்டு பேருக்கும் பழக்கம். ரெண்டு பேரும் வேற வேற டிபார்ட்மெண்ட் என்றாலும் எப்படியோ நெருங்கிய நண்பர்கள் ஆயிட்டோம்.

ரெண்டு பேரும் கிரிக்கெட், ஃபுட்பால், செஸ், வாலிபால் என்று விளையாட்டுகளில் மட்டுமல்லாது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகம் என்று மற்றவற்றிலும் கலக்கினோம்.

ஒரு முறை இன்டெர்காலேஜ் கல்ச்சரல் காம்பெடிஷனில் கலந்துகொள்வதற்காக ஒரு லேடிஸ் காலேஜுக்குப் போயிருந்தோம்.

அந்த காம்பெடிஷனுக்கு ஸ்டுடெண்ட் கோஆர்டினேட்டராக இருந்த பெண்தான் கிரிஜா. ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டிருந்தா. பாக்கறதுக்கு நல்ல அழகையாகவும், சூட்டிகையாகவும் இருந்தா.

காம்பெடிஷன் ரெண்டு மூணு நாள் நடந்தது. அந்த ரெண்டு மூனு நாளில் நானும் ராமுவும் கிரிஜாவும் நல்லா பழகிட்டோம்.

சாதாரணமா ஜென்ட்ஸ் காலேஜில் இன்டர்காலேஜ் காம்பெடிஷன் நடந்தா லேடிஸ் காலேஜ்லேருந்து பொண்ணுங்க வந்து கலந்துக்குவாங்க.

ஆனா எந்த லேடிஸ் காலேஜ்லேயும் இன்டர்காலேஜ் காம்பெடிஷன் நடந்தா எந்த ஜென்ட்ஸ் காலேஜையும் இன்வைட் பண்ண மாட்டாங்க.

ஆனா அந்த விஷயத்துல கிரிஜா படிச்சிக்கிட்டிருந்த காலேஜ் வித்தியாசமா நடந்துக்கிட்டாங்க. ஜென்ட்ஸ் காலேஜஸையும் இன்வைட் பண்ணியிருந்தாங்க.

லேடிஸ் காலேஜ்ங்குறதால ஆடம் டீசிங் இருந்தது. பசங்கள பொண்ணுங்க கிண்டல் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஒருத்தன் ரொம்ப உயரமா நடந்து போனான்.

அவனைப் பத்தி ஒரு பொண்ணு இன்னொருத்தி கிட்ட "இதோ பார்டி, இந்தத் தம்பிய ஸ்டூல் போட்டுதான் கிஸ் பண்ணனும் போல" என்று கிண்டல் அடித்தாள்.

அவண் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவனுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த எங்கள் காதில் விழுந்தது.

நானும் ராமுவும் திரும்பி அந்தப் பெண்களைப் பார்த்தோம். அந்தப் பெண்கள் ஒயிலாக எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். நாங்கள் போட்டிகள் நடக்கும் அரங்கத்துக்குச் சென்றோம்.

அங்குதான் கிரிஜா எங்களுக்க்கு அறிமுகம் ஆனாள். தானே வந்து எங்களிடத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

தாந்தான் இந்தப் போட்டிகளுக்கு ஸ்டுடென்ட் கோஆர்டினேட்டர் என்றும், ஏதாவது உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

எங்களுடன் பேசிக்கொண்டிருந்தவள் அங்கிருந்து நகர்வதற்குமுன் "ஒரு விஷயம்..." என்று தயங்கினாள்.

ஏன் தயங்கறீங்க, பரவாயில்லை சொல்லுங்க என்றதும், "வேற ஒண்ணுமில்ல, இங்க ஆடம் டீசிங் இருக்கும், அதை ஸ்போர்டிவா நீங்க எடுத்துக்கணும்" என்றாள்.

அதுக்கென்ன, வர்ற வழியிலேயே பார்த்துட்டோம் என்றோம். என்ன நடந்தது என்று கேட்டாள். நாங்கள் சொன்னதும் அவளும் எங்களுடன் சேர்ந்து சிரித்தாள்.

அங்கு நடந்த பல போட்டிகளில் அநேகமாக எல்லாவற்றிலுமே நானும் ராமுவும் கலந்துகொண்டு முதல் பரிசுகளைத் தட்டிச் சென்றோம்.

இன்டர் காலேஜ் காம்பெடிஷன் நடந்த அந்த மூன்று நாட்களில் கிரிஜாவுடனான எங்களின் நட்பு மிகவும் நெருங்கிய ஒன்றாக மாறிவிட்டது.

கடைசி நாள் அவளிடம் விடைபெறும்போது அவளை விட்டுப் பிரிய எங்களுக்கு மனமேயில்லை. ஆனால் வெறும் நட்புதான். காதல் கத்திரிக்காய் ஒன்றும் இல்லை.

எனக்கும் ராமுவுக்கும் காதலில் நம்பிக்கை இல்லை. படித்து முடித்தவுடன் ஒரு வேலை தேடிக்கொண்டு, அப்பா அம்மா பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணமாக இருந்தது.

கடைசி நாளன்று நாங்கள் பிரியும்போது கிரிஜா கேட்டாள் "அப்புறம் நாம எப்ப மீட் பண்றது?" என்று. எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

காம்பெடிஷன் முடிந்த கையோடு கிரிஜாவுடனான நட்பும் முடிவுக்கு வந்துவிட்டதென்று நாங்கள் நினைத்திருந்தோம்.

கிரிஜா இப்படிக் கேட்டவுடன் சரி என்று எங்கள் செல் நம்பரைக் கொடுத்தோம். அவளது செல் நம்பரையும் நாங்கள் வாங்கிக்கொண்டோம்.

இருந்தாலும் நாங்கள் அவளைத் தொடர்புகொள்ளவில்லை. ஒரு வாரம் கழிந்திருக்கும். திடீரென்று ஒரு நாள் அவளிடமிருந்து எங்களுக்கு கால் வந்தது.

நாந்தான் அந்த காலை அட்டெண்ட் செய்தேன். தான் யார் என்று சொல்லாமல் "யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்" என்று தமாஷ் செய்தாள்.

குரலை வைத்து அது கிரிஜான்னு தெரிந்துவிட்டாலும் கொஞ்ச நேரம் நாமும் தமாஷ் செய்யலாமேன்னு "தெரியலையே, நீங்களே சொல்லுங்களேன்" என்றேன்.

"என்னங்க அதுக்குள்ளே என்னை மறந்துட்டீங்களா, ஒரு வாரம்தானே ஆச்சு நாம கடைசியா சந்திச்சி? நாந்தான் கிரிஜா" என்றாள். "ஓ ஐயம் சாரி, எப்படி இருக்கீங்க?" என்று கேட்டென்.

"நான் நல்லா இருக்கேன். உங்க நண்பர் எப்படி இருக்கார்?" என்று கேட்டாள். "இதோ நீங்களே அவன்கிட்டே பேசுங்க" என்று போனை ராமுவிடம் கொடுத்தேன். ராமு கொஞ்ச நேரம் பேசினான்.

எனக்கு கிரிஜாவை நேரில் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளுக்கும் எங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஒரு நாள் ஒரு பார்க்கில் வைத்து அவளை சந்தித்தோம். கலகலப்பாகப் பேசினாள். காலேஜில் வைத்து சந்தித்தபோது பேசியதைவிடவும் இப்போது வெளியிடத்தில் சந்திக்கும்போது மிகவும் கலகலப்பாகப் பேசினாள்.

கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஒரு ரெஸ்டாரண்டுக்குச் சென்றோம். லைட்டாக சாப்பிட்டோம்.

நாந்தான் பணம் கொடுப்பேன் என்று கிரிஜா அடம்பிடித்தாள். நீங்கள் வேறு ஒரு நாள் கொடுங்கள், இன்று நாங்கள் கொடுக்கிறோம் என்று நாங்களே பணம் கொடுத்தோம்.

அன்று முதல் அடிக்கடி நாங்கள் சந்தித்தோம். கிரிஜாவின் இனிய குணமும், கலகலப்பான சுபாவமும் எங்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.

எங்கள் நட்பு நாங்கள் எங்களது கல்லூரிப் படிப்பு முடிந்தபிறகும் தொடர்ந்தது. கிரிஜா மேற்படிப்பு சேர்வதற்கு முன் ஒரு வருட இடைவெளி விட்டாள்.

என்ன காரணம் என்று கேட்டபோது சும்மாதான் என்று பதிலளித்தாள். நானும் ராமுவும் வேலை தேடும் படலத்தில் இருந்தோம்.

எனக்கு ஒரு நிறுவனத்தில் எக்சிக்யூடிவ் ஆக வேலை கிடைத்தது. ராமுவுக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்று எண்ணம். ஆனால் அதற்கான மூலதனம் இல்லாததால் அவனும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்.

நாங்கள் கிரிஜாவை ஒவ்வொரு மாதமும் இரண்டு மூன்று முறை சந்தித்தோம். ஒருமுறை கிரிஜா அவள் வீட்டுக்கு எங்களை அழைத்திருந்தாள். நாங்களும் போயிருந்தோம்.

தன் அம்மாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். கிரிஜாவின் அம்மாவும் நல்ல அழகாயிருந்தாள்.

எங்களை அறிமுகம் செய்துவைக்கும்போது கிரிஜா "இவர்கள் இருவரும் இரட்டையர்கள்" என்று சொன்னாள். அதற்கு அவளது அம்மா "ட்வின்ஸா?" என்று கேட்டாள்.

"இல்லேம்மா இவங்க ரெண்டு பேரும். . ." என்று கிரிஜா இழுத்தபோது அவளது அம்மா கேட்டாள் "ரெண்டு பேரும் பாடுவாங்களா?" என்று. "இல்லை" என்றாள் கிரிஜா.

அப்படின்னா வயலின் வாசிப்பாங்களா? என்றாள் கிரிஜாவின் அம்மா. இல்லேம்மா, ரெண்டு பேரும் கச்சேரி செய்வாங்க, ஆனா அது சங்கீதக் கச்சேரி இல்லே, அரட்டைக் கச்சேரி என்று கிரிஜா சொன்னபோது அவளது அம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.

கிரிஜா இப்படித்தான். கொஞ்சம் குறும்புக்காரி. அதனாலேயே அவளை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

ராமுவுக்கு எப்படி என்று தெரியவில்லை. அவன் எதையும் வெளிப்படையாகப் பேச மாட்டான். கொஞ்சம் அழுத்தமானவன். அவன் எந்த அளவுக்கு அழுத்தமானவன் என்பது சில நாட்களில் தெரிந்துவிட்டது.

நானோ ராமுவோ கிரிஜாவை தனியாகச் சந்தித்ததில்லை. எப்போதும் இருவரும் சேர்ந்துதான் சந்திப்பது வழக்கம்.

ஒருமுறை கிரிஜாவிடமிருந்து எனக்கு கால் வந்தது. "என்ன கிரிஜா? எப்படி இருக்கே?" என்று கேட்டேன். அவள் "ராஜு, ஒரு விஷயம் சொல்லணும். நாம சந்திக்கணுமே" என்றாள்.

"என்ன விஷயம். போனிலேயே சொல்லேன். என்ன உனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்களா?" என்றேன். "சீச்சீ, அதில்லே, இது வேற விஷயம். நேரில்தான் சொல்ல முடியும்" என்றாள்.

என்ன சஸ்பென்ஸ் வைக்கிறாளே, சரி என்று "ராமுவுடன் பேசிவிட்டு உனக்கு தகவல் சொல்கிறேன் எங்கே சந்திக்கலாம் என்று" என்று சொன்னேன்.

"இல்லே ராமுவைத் தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கு உங்களைத்தான் பார்க்கணும்" என்றாள். என்ன கிரிஜா இது ராமு இல்லாமல் நான் உன்னைத் தனியாகச் சந்தித்த வழக்கம் இதுவரை இல்லையே என்றேன்.

"இல்லே ராஜு. ராமுவைக் கூப்பிட வேண்டாம். நீங்க மட்டும் தனியா வந்தா போதும். எதுக்கு வாக்குவாதம் பண்ணிட்டு இருக்கீங்க. வாங்கண்ணா வாங்களேன்" என்றாள்.

நான் யோசித்தேன். ஏதோ எமர்ஜென்சி போலும். விஷயம் இல்லாமல் இப்படி தனியாக வரச் சொல்லிக் கூப்பிட மாட்டாள். " சரி வருகிறேன்" என்றேன்.

அன்று மாலை ஒரு ரெஸ்டாரண்ட்டில் சந்தித்தோம். அது ஒரு திறந்தவெளி ரெஸ்டாரண்ட். அங்கு வருபவர்கள் எழுந்து செல்ல மனமில்லாமல் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அவ்வளவு ரம்மியமான இடம். எனக்கு மிகவும் பிடித்த இடம். குறிப்பிட்ட நேரத்திற்கு நான் சரியாகப் போய்ச் சேர்ந்துவிட்டேன்.

கிரிஜாதான் தாமதமாக வந்தாள். தான் தாமதமாக வந்ததற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.

வழக்கமாகக் கலகலப்பாக பேசும் கிரிஜா கொஞ்சம் தயங்கித் தயங்கிப் பேசினாள். எனக்கோ சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

"என்ன விஷயம், கிரிஜா என்னவோ போல இருக்கே. எதுவா இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்க" என்றேன்.

"ஒண்ணும் இல்லீங்க. உங்க ஃப்ரண்ட் இருக்காரே ராமு. . ." என்று இழுத்தாள்.

"அவனுக்கு என்ன? ஆமாம் ஏன் என்னைத் தனியா பாக்கணும்னு சொன்னீங்க? ஏன் ராமுவை கூட்டிக்கிட்டு வர வேண்டாம்னு சொன்னீங்க?" என்று கேட்டேன்.

"எப்படி சொல்றதுன்னு தெரியலே. ஆனா சொல்லித்தான் ஆகணும். ஒண்ணும் இல்லே. உங்க ஃப்ரண்ட் என்னை லவ் பண்றாராம்" என்று சொன்னாள். சொல்லிவிட்டு தலையைக் கவிழ்த்தித் தரையை பார்த்தாள்.

எனக்கு அந்த விஷயத்தைக் கேட்டதும் பயங்கரக் கடுப்பு ஏற்பட்டது. நெருங்கிய நண்பனான என்னிடமே ராமு இந்த விஷயத்தைச் சொல்லவில்லையே. நேரடியாக கிரிஜாவிடமே பேசியிருக்கிறானே என்று நினைத்துக் கொண்டேன்.

கிரிஜாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. "இதோ பாருங்க கிரிஜா, ராமு என்னதான் என்னோட நெருங்கிய நண்பனாக இருந்தாலும் இந்த விஷயத்தை என்னிடம் இதுவரை பெசியதில்லை. அதனால அவன் மேல எனக்கு இப்ப ரொம்ப கோபமா இருக்கு. சரி, நீங்க என்ன நினைக்கிறீங்க? நீங்க அவனை லவ் பண்றீங்களா?" என்று கேட்டேன்.

கிரிஜா கொஞ்சம் மௌனமாக இருந்தாள். அப்போது சர்வர் வந்து "என்ன சார் சாப்பிடுறீங்க?" என்று கேட்டான்.

"ரெண்டு காப்பி கொண்டுவாப்பா" என்றேன். கிரிஜா என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள். "என்ன ராஜு, எப்பவும் டீதானே சாப்பிடுவீங்க? இன்னைக்கு காப்பிக்கு ஆர்டர் கொடுத்திருக்கீங்களே" என்றாள்.

"அதுவா, இன்னைக்கு கிளைமேட் வித்தியாசமா இருக்கு இல்லியா, அதுக்குத் தோதா வித்தியாசமா காப்பி சாப்பிடுவோமேன்னுதான்... " என்று பதில் சொன்னேன்.

இருந்தாலும் அந்த பதிலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவள் முகபாவத்திலிருந்து தெரிந்தது. உண்மையில் கிரிஜாவிடம் நான் பொய்தான் சொன்னேன்.

எப்போதும் நான் டீயே சாப்பிடுவேன் அதன் இனிப்பிற்காக. காப்பியைத் தவிர்ப்பது அதன் கசப்பிற்காக. ஆனால் கிரிஜா சொன்ன விஷயம் எனக்கு கசப்பாக இருந்ததால் கசப்பாக ஏதாவது சாப்பிடுவோம் என்று காப்பியைத் தேர்வுசெய்தேன்.

"என்ன கிரிஜா, இந்த காப்பி, டீ விவகாரம் ஒருபக்கம் இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலையே" என்றேன்.

"என்ன ராஜு சொல்றது? ராமு இப்படி திடுதிப்புன்னு தன் காதலைச் சொல்வார்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலே. நான் அவரை ஒரு நண்பராத்தான் இதுவரை பாத்தேன்" என்றாள்.

"அப்புறம் என்ன? இப்ப என்கிட்ட சொல்றதை அப்படியே அவன்கிட்ட சொல்ல வேண்டியதுதானே" என்றேன்.

"இல்லே ராஜு. அவர் வெறுமனே என்னைக் காதலிக்கிறதை மட்டும் சொல்லலை. என்னைக் கல்யாணம் செஞ்சிக்கவும் விருப்பமாம். எங்க அப்பா அம்மா கிட்ட பேசி முடிவைச் சொல்லச் சொன்னார்" என்றாள்.

ஓ அந்த அளவிற்குப் போய்விட்டதா என்று நான் நினைத்துக்கொண்டேன். கிரிஜாவிடம் எதுவும் சொல்லவில்லை.

"நீங்க என்ன நினைக்கிறீங்க ராஜு?" என்று கேட்டாள்.

கிரிஜா ஒரு ரெண்டு நிமிஷம் மௌனமாக இருந்தாள். ஏதோ யோசிக்கிறா போலிருக்கு என்று நானும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தேன்.

பிறகு "நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? ராமுவை எனக்கும் பிடிச்சிருக்கு. என் விருப்பத்துக்கு என் பெற்றோர் தடை சொல்ல மாட்டாங்க. ராமுவை திருமணம் செஞ்சிக்க எனக்கு இஷ்டம்தான்" என்றாள்.

அதைக் கேட்டதும் எனக்கு சப்பென்றாகிவிட்டது. நான் ஒன்றும் சொல்லவில்லை. அவள் விருப்பத்துக்கு மாறாக ஏதாவது சொல்லப் போய் அவள் என் மேல் கோபித்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?

அதனால்தான் அவள் சொன்னதுக்கு எதிராக நான் எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் ஏதாவது சொல்லியாக வேண்டுமே என்று "அப்புறம் என்ன கிரிஜா? பேரண்ட்ஸ் கிட்ட பேசுங்க. அவங்களுக்கும் ஓகேன்னா சட்டுபுட்டுன்னு கல்யாணம் செஞ்சிக்கங்க" என்றேன்.

"அப்படியா சொல்றீங்க" என்றாள். காப்பி வந்தது. கிரிஜா காப்பியை ருசித்துக் குடிப்பதை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதை அவள் கவனித்துவிட்டு என்ன பாக்கறீங்க என்று கேட்டாள். சும்மாதான் பார்த்தேன் என்றேன்.


கிரிஜாவின் நட்பை நான் இழக்க விரும்பவில்லை. அதனால்தான் அவளது விருப்பம் என்ன என்று தெரிந்துகொண்டுவிட்ட பிறகு அதற்கு எதிர்மாறாக எதுவும் சொல்லவில்லை.

அப்படியே எதாவது சொன்னாலும் அவள் நான் பொறாமையால்தான் அப்படிப் பேசுகிறேன் என்று எடுத்துக்கொண்டுவிட்டால்?

இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டும் போலிருந்தது எனக்கு.

"சரி கிரிஜா, நாம வேற ஒரு நாள் மீட் பண்ணலாம். கிளம்புவோமா?" என்று கேட்டேன்.

"என்ன ராஜு, எப்பவும் என்னோடு மணிக்கணக்கா என்னோடு பேசிக்கிட்டிருப்பீங்க, இன்னைக்கு சீக்கிரம் கிளம்பறீங்க" என்றாள்.

கொஞ்சம் வேலை இருக்கிறது என்று பொய் சொன்னேன். அப்படியா, அப்போ கிளம்புவோம் என்றாள்.

அங்கிருந்து வெளியே வந்து, கிரிஜாவை ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டு, நான் கொஞ்ச நேரம் நடந்தேன்.

காப்பியின் கசப்பு போதவில்லை. மறுபடியும் ஏதாவது கசப்பாக சாப்பிட வேண்டும் போல் இருந்ததால் ஒரு ஜூஸ் கடைக்குள் நுழைந்தேன்.

என்ன சார் சாப்பிடறீங்க என்ற பையனிடம் "மூலிகை ஜூஸ் கொண்டுவாப்பா" என்றேன்.

அவன் "சார் அது ரொம்ப கசப்பா இருக்கும். ஒரு மடங்குகூட விழுங்க முடியாது" என்றான்.

"ஏம்ப்பா உன் அட்வைசை யார் கேட்டா? கஸ்டமர் கேக்கறதைக் கொடுக்குறதுதானே உன்னோட வேலை" என்றேன்.

சாரி சார் என்று உள்ளே போய் நான் கேட்ட மூலிகை ஜூஸைக் கொண்டுவந்து வைத்தான்.

இதற்குமுன் நான் அதை சாப்பிட்டதில்லை. முதல் முறையாக சாப்பிடுகிறேன். மிகவும் கசப்பாக இருந்தது.

ஆனால் கிரிஜா ராமுவை திருமணம் செய்துகொள்ளப்போகிற விஷயத்தைவிட அப்படி ஒன்றும் கசப்பாக இருக்கவில்லை எனக்கு.

பக்கத்தில் வந்து நின்ற கடைப் பையனிடம் "இன்னொரு கிளாஸ் மூலிகை ஜூஸ் கொண்டுவாப்பா" என்றேன்.

சார் மறுபடியும் இன்னொரு கிளாஸ் சாப்பிடப் போறீங்களா என்று அவன் அலறினான்.

"ஏம்ப்பா ஜூஸ் சாப்பிடப்போறது நானு. என்னவோ நீ சாப்பிடப் போறாப்பல அலறுரே" என்றேன்.

பையன் எதுவும் சொல்லாமல் மௌனமாக உள்ளே போய் கொண்டுவந்து வைத்தான்.

கிரிஜா என்னை தனியாக சந்தித்துப் பேசிய அன்று இரவே ராமுவிடம் இருந்து போன் வந்தது.

"என்னடா விஷயம்"னு கேட்டேன். "ஒண்ணும் இல்லேடா. நான் கிரிஜாவை லவ் பண்றேன். அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. நாங்க ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்கிறதா இருக்கோம்" அப்படின்னு சொன்னான்.

"டேய் இன்னிக்கு கிரிஜாவைச் சந்திச்சேன். நீ இந்த விஷயத்தைச் சொல்றதுக்கு முன்னாடியே அவ என்கிட்ட சொல்லிட்டா. ஏண்டா நீ என்னோட நெருங்கிய நண்பன். இந்த விஷயத்தை என்கிட்டே முன்னாடியே சொல்றதுக்கு என்னடா. கிரிஜா ஒரு மூணாவது மனுஷி. அவகிட்டே இருந்து தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு" என்று கோபித்துக்கொண்டேன்.

"சாரிடா, அவளோட முடிவு தெரிஞ்சிக்கிட்ட பிறகு உன்கிட்டே சொல்லலாம்னு இருந்தேன். ஒருவேளை அவளுக்கு என்னைப் பிடிக்கலைன்னா இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைச்சிடலாம்னு இருந்தேன். அவ தன் முடிவை என்கிட்டே சொல்றதுக்க்கு முன்னாடி உன்கிட்டே டிஸ்கஸ் பண்ணியிருக்கா போலிருக்கு. சாரிடா" என்றான்.

என் கோபத்தையும் கசப்பையும் மறைத்துக்கொண்டு அவனுக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்.

ராமு கிரிஜாவை லவ் பண்றான் என்ற விஷயம் முன்கூட்டியே எனக்குத் தெரிஞ்சிருந்தால் நானும் கிரிஜாவிடம் ப்ரபோஸ் பண்ணியிருப்பேன். இப்போ டூ லேட். ராமு முந்திக்கொண்டுவிட்டான்.

இத்தனைக்கும் நாங்க மூணு பேரும் சந்திக்கும்போது கிரிஜாவும் நானும்தான் கலகலவென்று பேசிக்கொண்டிருப்பான்.

ராமு அவ்வளவாகப் பேச்சில் கலந்துகொள்ள மாட்டான். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையே கவனித்துக்கொண்டிருப்பான். எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தை சொல்வான். அவ்வளவு அழுத்தமான ஆள்.

அந்த அழுத்தத்தை கிரிஜாவை அவன் காதலிக்கும் விஷயத்தை முன்கூட்டியே எனக்கு சொல்லாததிலும் காட்டிவிட்டான்.

அப்புறம் என்ன, ஒரு சுபயோக சுபதினத்தில் ராமுவுக்கும் கிரிஜாவுக்கும் திருமணம் நடந்தது. நாந்தான் மாப்பிள்ளைத் தோழன்.

கிரிஜா ஏற்கனவே நல்ல அழகு. அந்த அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல திருமணத்தின்போது அவளுக்கு அலங்காரம் பண்ணியிருந்தனர்.

என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. அதை கிரிஜாவிடமே சொன்னேன். அவள் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள்.

என்னதான் கிரிஜாவை நான் உள்ளூரக் காதலித்தாலும், இப்போது அவள் என் நண்பனின் மனைவியாகி விட்டாள் அல்ல்லவா? இனிமேல் அவள் மேல் நான் ஆசைப்படக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? அதற்கு எதிர்மாறாக அல்லவா நடக்கும்.

திருமணம் நடந்து சில மாதங்கள் கழிந்தன. வாரத்திற்கு ரெண்டு மூணு முறையாவது ராமுவின் வீட்டுக்குப் போவேன் அவனைச் சந்திக்க. அப்படியே கிரிஜாவிடமும் பேசிவிட்டு வருவேன்.

கிரிஜா நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டே போனாள். அதன் மர்மம் எனக்குப் புரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் அதைப் பற்றி யோசிப்பேன் என்ன காரணமாக இருக்கும் என்று.

அப்போதுதான் புரிந்தது, கல்யாணம் ஆகிவிட்டது, புருஷனுடன் செக்ஸில் ஈடுபடுகிறாள், போதுமான அளவுக்கு செக்ஸ் இன்பம் அனுபவிக்கிறாள், அந்த நிறைவுதான் அவளது அழகை அதிகமாக்கிக் காட்டுகிறது என்று.

எப்படியோ கிரிஜா சந்தோஷமாக இருந்தால் சரி என்று நினைத்துக்கொள்வேன்.

இப்போதும் ரெஸ்டாரண்டுகளுக்குப் போகிறோம் நாங்கள் மூவரும். ஆனால் நானும் ராமுவும்தான் அதிகமாகப் பேசுகிறோம்.

கிரிஜா அதிகம் பேசுவதில்லை. கணவன் மீது உள்ள மரியாதையால் அவள் அதிகமாகப் பேசுவதில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன் நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக